குழந்தைக்காக அடிப்படைத் தேவைகளையும் தியாகம் செய்யும் நிலை தேவையற்ற ஒன்று. கணவனும் மனைவியும் இணைந்து வாழத்தான் திருமணம் செய்துகொள்கின்றனர். குழந்தை என்பது அந்த வாழ்வின் ஒரு பகுதி. இதைக் குழந்தைகளுக்கும் புரியவைக்க வேண்டும். பத்து வயதுக்கு மேல் அவர்களுக்கு எனத் தனியாக படுக்கை அமைத்துக் கொடுக்கவும். வளர்இளம் பருவத்தை எட்டும்போது தனியறையில் உறங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். தனக்கான வாழ்வைப் பற்றித் திட்டமிடவும், கனவு காணவும், சிந்திக்கவும் இந்தத் தனிமை குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கும். உடல், மனக் குழப்பங்களை நீக்குங்கள்
பெண் குழந்தைகள் வளர்இளம் பருவத்தை எட்டும்போதே அவர்களிடம் பருவம் அடைவது குறித்துப் பேச வேண்டும். அப்போது, உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிமுகம் செய்யலாம். பருவம் அடைவது பெண்ணுடல் உற்பத்திக்குத் தயாராகும் நிகழ்வு, பெருமைக்குரியது என்ற எண்ணத்தை உருவாக்குவது அவசியம். பெரும்பாலான பெண் குழந்தைகள் இதைப் பற்றிய தெளிவின்மையால் அவதிப்படுகின்றனர். அப்போது ஏற்படும் வலி, வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை பிரச்னையாக உணர்கின்றனர். இந்த பயம் போக்க மருத்துவரீதியாக விளக்கம் அளிக்கலாம். இந்தக் காலகட்டத்தில் தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரியவைக்கலாம். எப்படிச் சொல்வது எனத் தயங்காமல், தாயே குழந்தையின் தோழியாக மாற வேண்டும்.
ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும்போது உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட விஷயங்களைத் தந்தை புரியவைக்கலாம். இந்த வயதில் எதிர்ப்பாலினத்தவரைப் பார்க்கும் பார்வை, எண்ணம் எல்லாம் மாறும். மனதில் பல குழப்பங்களும் தோன்றும். இவற்றை ஆண் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டியது தந்தையின் கடமை. தாயை அடிமையாக நடத்தும் வீடுகளைச் சேர்ந்த ஆண் குழந்தைகள், தன்னோடு படிக்கும், பழகும் பெண்களை அடிமையாகப் பார்க்கின்றனர். மனதளவில் பெண்கள், ஆண்களைவிட உறுதியானவர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்துமுடிக்கும் திறமையும் பெண்களுக்கு உண்டு என்பதைப் புரியவைக்கலாம். பெண்ணின் பாசிட்டிவான விஷயங்களை ஆண் குழந்தைகளுக்குச் சொல்லும்போது, அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும்.