ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்வதில் உள்ள இன்னல் காரணமாகவே பேசாமல் இருக்கக்கூடும். எனவே, அதிகம் பேசும் குழந்தைகளை பேச விட்டு் கேட்பதைவிட பேசாத குழந்தைகளிடம்தான் அதிகம் பேச வேண்டும். அதுவும் பரிவோடு பேச வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கிறாயா, எதைப் பார்த்தாவது அஞ்சுகிறாயா, ஏதாவது தேவையா? என்றெல்லாம் கேட்டு அந்தக் குழந்தையின் மவுனத்துக்கும் ஒதுங்கலுக்கும் காரணம் என்ன என்று அறிந்துகொள்ளலாம். அதிகம் பேசாமல் மவுனமாக இருப்பதும் மனிதர்களின் இயல்பான சுபாவம்தான்.
அமெரிக்காவின் தேசிய மனநல மருத்துவ கழகத்தின் மூத்த மருத்துவ நிபுணர் கேதலின் மெரிகங்காஸ் மற்றும் அவருடைய சகாக்களும் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவற்றை பதிவுசெய்தனர். அவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என்றே தெரிவித்தனர். பேசாமலும் தங்கள் வேலைகளை மவுனமாகவும் செய்யும் குழந்தைகளை அல்லது மாணவர்களை நாம் பாராட்டுவதோ கொண்டாடுவதோ கிடையாது. அதுவே பொதுவான கலாசாரமாகவும் இருக்கிறது. வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்று கூறி, பட்பட்டென்று பதில் சொல்லும் குழந்தைகளையே புத்திசாலிகள் என்று புகழும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் முதல் குழந்தையை போலவே அடுத்த குழந்தையின் சுபாவங்கள் இருப்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சிகளை ஆராய்வதுதான் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் சவாலாக இருக்கிறது. மவுனமாக இருப்பது அல்லது ஒதுங்கி இருப்பது என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு கட்டம்தான். தனக்கு புதிதான அல்லது மனதளவில் ஏற்க முடியாத புதிய சூழலில் குழந்தை பெரும்பாலும் மவுனமாக இருக்கிறது. புதிய சூழலுக்கு பழக்கப்படாத குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய வகுப்புக்கு போகும்போது அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருப்பார்கள். அந்த மாதிரி சூழல்களில் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைப்பது அவசியம். பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும் குழந்தையிடம் அச்சமும் பதற்றமும் தொடர்ந்தால் பெற்றோர்தான் அதை விசாரித்து, தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும்.காது கேளாமை, கரும்பலகையில் எழுதி இருப்பதைப் பார்ப்பதில் உள்ள கோளாறு, பாடம் சொல்லித்தரும் விதம் சரியில்லாததால் புரிந்துகொள்ள முடியாமை என்று பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். எனவே குழந்தையிடமே குறை என்ற அவசர முடிவுக்கு வந்து குழந்தையைத் திட்டுவதோ தண்டிப்பதோ கூடாது என்றும் உளவியலாளர்கள் கூறுகின்றனர்.