குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள். இதனால் எது சரியானது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது. ஏதோ ஒரு கோபத்தில் லேசாக கண்டித்தாலே தாங்கி கொள்ள முடியாத மனநிலைக்கு ஆளாகின்றனர்.
குழந்தை எது கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறார்கள். குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இந்த இடத்தில் தான் குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. தான் நினைத்ததை அடைய அடம் பிடிக்கும் குழந்தைகளால் யாரோடும் இணங்கி செல்லவோ, விட்டுக் கொடுத்து போகவோ முடிவது இல்லை. குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து தான் எதையும் முதலில் கற்றுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் நம்பிக்கையோடு அணுகும் வகையில் பெற்றோரின் செயல்பாடு இருக்க வேண்டும். அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் எந்த பிரச்சினை என்றாலும் தீர்வு கேட்டு அணுகுவார்கள். மனரீதியாக சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்து தேற்ற முடியும். தோல்வியே கண்டாலும் தொடர்ந்து முயன்று வெற்றி வீரர்களாக வலம் வர குழந்தைகளை தயார்படுத்த முடியும்.