குறிப்பாக. உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தூய்மையின்மை காரணமாகவும், கை சுத்தம் இல்லாமல் இருப்பதும் நோய்த்தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி, வெளியே எங்காவது சென்று வந்த பிறகு, கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுவதுதான்.
பல குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம். மேலும் கழிவறை, குளியல் அறை, பொது இடங்களைப் பயன்படுத்தும் போதும் குழந்தைகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். எனவே அதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது கைசுத்தம் மிக அவசியம். கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும். தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகளை கையாளும்போதும் கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படிச்செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம். கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலகக் கை கழுவும் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது.