நம்மை நாமே மதித்துக் கொள்வது மற்றும் மற்றவர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று வரையறுப்பது சுய மரியாதை ஆகும். சுயமரியாதை தான் நாம் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அடிப்படையாக இருக்கும். சுயமரியாதை தன்னம்பிக்கை அளிக்கும். புகழ் மற்றும் கௌரவத்தை கொடுக்கும். சுயமரியாதை இல்லாவிட்டால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நம் ஒப்புதல் இல்லாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும். நாம் அதன் படி செயல் பட வேண்டி வரும்; நம் இயற்கைக்கு மாறாக செயல் பட நேரிடும்.
குழந்தைகள் தவறு செய்யும் போது அல்லது இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளும் போது பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க கூடாது; தடுக்கவும் கூடாது. அதற்கு மாறாக அவர்களிடம் இப்படி கேட்க வேண்டும் "இதே காரியத்தை உனக்கு யாராவது செய்தால் நீ எப்படி உணர்வாய்"? "மற்றவர்கள் இடத்தில் இருந்தும் யோசிக்க கற்றுக்கொள்". இந்த அணுகுமுறை குழந்தைகளே தாங்கள் செய்வதை சரியா தவறா என்பதை யோசிக்கும் அறிவை வளர்க்கும். இதனால் அவர்களே தங்களை மதித்துக் கொள்ளும் உணர்வை உண்டாக்கும். பெற்றோர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து குழந்தைகள் பல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். மதித்தல் என்ற நற்பண்பை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டுமானால் முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு உதவிக்கு நன்றி சொல்வது, நல்ல செயல் செய்யும் போது பாராட்டுவது, அவர்களுக்கு பெற்றோர்கள் சிறு தவறு இழைத்து விட்டால் மன்னிப்பு கேட்பது இப்படி குழந்தைகளோடு பழகும் பொது இயல்பாக அவர்களும் மதித்தல் என்ற நற்பண்பை கற்றுக் கொள்வார்கள். மற்றவர்களோடு இனிமையாக பழகும் கலையை வளர்த்துக் கொள்வார்கள். மேலே சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு குழந்தைகளின் மனதில் மதித்தல் என்ற நற்பண்பை சிறு வயது முதலே வளர்க்கத் தொடங்குங்கள். அவர்களின் வாழ்வை வளமாக்குங்கள்.