0 - 2 வயது: பிறந்த குழந்தைகளின் நரம்பு மண்டலம் முழுமையான வளர்ச்சி அடைவதற்கு சிறிது காலம் ஆகும். அதற்கு முன்பு ஏதேனும் பெரிய சத்தம் கேட்டால் அவர்கள் மிகவும் பயப்படுவார்கள். உதாரணத்திற்கு மின்னல், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, ரெயில் சத்தம், பட்டாசு போன்றவற்றுக்கு அஞ்சுவார்கள்.
3 - 4 வயது: தொடக்கப் பள்ளியில் சேர்க்கும் குழந்தைக்கு தனது பெற்றோரைப் பிரிகிறோம் என்ற பயம் ஏற்படும். இருட்டான அறை, நிழல், தனியாக தூங்குதல், கடுமையான மின்னல் மற்றும் இடி சத்தத்திற்கு மிகவும் பயப்படுவார்கள். சில குழந்தைகள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் விளையாட தயக்கம் காட்டுவார்கள்.
5 - 7 வயது: பள்ளியில் ஏதேனும் தவறு செய்து ஆசிரியர் கோபமாக பேசினால் மிகவும் வருத்தப்படுவார்கள். எதிர்பாராத வீடு மாற்றம், மருத்துவர் ஊசி போடுதல் போன்றவற்றுக்கு பயப்படுவார்கள். வீட்டில் தனியாக இருக்கும்போது, அவர்களே பல்வேறு விஷயங்களைக் கற்பனை செய்துகொண்டு அஞ்சுவார்கள்.
8 - 10 வயது: இந்த வயதில் நன்றாக படிக்க வேண்டும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற பயம் அதிகமாக இருக்கும். ஏதேனும் போட்டியில் கலந்து கொண்டால் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் அதிகமாக இருக்கும். பேய் கதைகளுக்கும், சிலந்தி, கரப்பான்பூச்சி போன்றவற்றுக்கும் பயப்படுவார்கள்.
10 வயதுக்கு மேல்: தங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படுவார்கள்.தான் என்னவாக ஆக வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற சிந்தனையே அவர்களுக்கு பயமாக மாறிவிடும். சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சுய பாதுகாப்பை நினைத்து வருந்துவார்கள்.
பயங்களை எதிர்கொள்ளும் வழிகள்:
1) பெற்றோர்களே, குழந்தைகளின் பயத்தைப் போக்க முடியும். குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தை கவனித்து, அவர்களை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் கேட்கும் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் கூற வேண்டும். பயத்தினை எப்படி எதிர்கொண்டு கடந்து வர வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்க வேண்டும்.
2) செல்லப்பிராணிகளை குழந்தைகள் எதிர்கொண்டால், பெற்றோர்கள் உடனிருந்து அதனுடன் எப்படி பழக வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
3) குழந்தைகளுக்கு வெற்றி தோல்வி பற்றி தெளிவு படுத்த வேண்டும். 'எந்த விஷயமாக இருந்தாலும் வெற்றியோ, தோல்வியோ முக்கியமில்லை. அதற்கு நீ எடுக்கும் முயற்சி மட்டுமே முக்கியம்' என்று அவர்களுக்கு நம்பிக்கை வழங்க வேண்டும்.