No results found

    ஆறு வயதுக்குள் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டிய நல்விதைகள்


    நம் குழந்தைகளின் பிஞ்சு மனதிலேயே நல்ல பழக்கங்களை விதைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அவசியம்.

    அனுபவங்களின் வழியாகக் கற்றுக்கொள்பவையே குழந்தைகளின் கேரக்டரை வடிவமைக்கின்றன. பிறந்தது முதல் ஆறு வயது வரை மனதில் விதைக்கப்பட்ட விஷயங்களே வளர்ந்து, அவர்களை வாழ்க்கை முழுக்க வழிநடத்துகின்றன. இந்த வயதில் நாம் எதைச் சொன்னாலும், அவர்கள் எதிர்க் கேள்வியின்றி கேட்டுக்கொள்கிறார்கள். நாம் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நம்புகின்றனர். * குழந்தைகளுக்கு முதலில் பழக்கப்பட வேண்டியது பல் துலக்குவதைப் பற்றியே. ஆரம்பத்தில் இதற்கென நேரம் ஒதுக்கி மெனக்கெட வேண்டும். நீங்கள் அவர்கள் முன் பல்லைத் தேய்த்துக் காட்டுங்கள். அதற்கு முன்பு நீங்கள் பல்தேய்க்கும் முறை சரிதானா என்பதை பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நாம் சரியாகச் செய்தால்தான் குழந்தைகளுக்கும் அந்த முறை கைக்கூடும்.

    * எந்த விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும்போதும் அதை எதற்காகச் செய்கிறோம். செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் விளக்கமாகச் சொல்லவும். குறிப்பாக, ஏன் இரண்டு வேளை குளிக்க வேண்டும், அப்படிக் குளிப்பதால் என்ன நன்மை என்பதைச் சொல்லலாம். குளிப்பதையே ரசனையான அனுபவமாக மாற்றலாம். குளித்த பிறகு மனமும் உடலும் அடையும் உற்சாகத்தைப் புரிந்துகொள்ளச் செய்யலாம். * மிகச் சிறு வயதிலேயே தானாகச் சாப்பிடுவது, உடுத்துவது, தூங்குவது என எல்லாவற்றையும் திணிக்காமல் அவர்களிடம் அனுமதி கேட்கலாம். எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் சின்னச்சின்ன கேள்விகள் எழுப்பலாம். அந்தக் கேள்விகளின் வழியாகவே, குழந்தைகளின் கற்றல் துவங்குகிறது. எந்த விஷயத்தையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள இதுபோன்ற விஷயங்களைப் பெற்றோர் பழக்கப்படுத்தலாம்.

    * பெரும்பாலான வீடுகளில் காலையில் எழுவதும் பள்ளிக்குக் கிளம்புவதும் போர்க்கோலமாக இருக்கும். இது அவ்வளவு சிக்கலான விஷயமில்லை. தூங்கப்போகும் முன்பு, வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் அடுத்த நாள் வேலைகள், அதற்கான நேரத் திட்டமிடல் பற்றிப் பேச வேண்டும். பள்ளிக்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் எனில், உங்கள் குழந்தை எந்த நேரத்தில் எழுந்து என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், எல்லோருக்குமே காலை நேரம் இனிமையாக மாறும். * தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலைக்கடன் கழிப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல்விடுவதே பல நோய்களுக்குக் காரணம். காலை வேளையில் இதற்கான நேரமும் அவசியம். சிறுநீர் மற்றும் காலைக்கடன் கழிப்பதை அடக்குவதால், உடல் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். தினமும் குழந்தைகள் எழுந்ததும் மிதமான சூட்டில் சுடுநீர் கொடுத்து பத்து நிமிடம் கழித்துக் குளிக்க வைத்தால், காலைக் கடன் பிரச்னை என்பது இருக்கவே இருக்காது.

    * தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டை வைத்து வாயை மூடிக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தைகளின் இந்தச் செயல்களைப் பார்த்து, அந்தப் பழக்கம் இல்லாத பெரியவர்களும் மாறிக் கொள்வார்கள். * விடுமுறை நாள்களில் வீடு, டாய்லெட் சுத்தம் செய்வது, தேவையற்ற பொருள்களைத் தேடிப்பிடித்துக் கழிப்பது போன்றவற்றையும் அவர்களுடன் இணைந்து செய்வது அவசியம். தனது இடத்தையும் தன்னையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர இது வாய்ப்பாக அமையும். * உணவை வீணாக்க வேண்டாம் என்று பொதுவாகச் சொல்வது தீர்வாகாது. உணவு தயாரிக்கும்போது சின்னச் சின்ன வேலைகளிலும் குழந்தைகளின் பங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். உணவு டைனிங் டேபிளுக்கு வருவதற்கு முன்பு அதற்காகச் செய்த உழைப்பைக் குழந்தைகள் புரிந்துகொள்ளச் செய்தால், உணவை வீணாக்கும் பழக்கம் மறைந்துவிடும்.

    Previous Next

    نموذج الاتصال