வேலைச்சூழலில், பெற்றோரின் மன நிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிகாட்டுதலை உருவாக்கிக் கொடுப்பதில் அதிகப்படியான சவால்கள் இருக்கும். ஒவ்வொரு பெற்றோரின் மனநிலையும், ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்காக, அவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கு எந்த அளவுக்கு முயற்சிக்கிறார்கள்? அவர்களின் உணர்ச்சிகளையும், சூழலையும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை வகைப்படுத்துவதில் அதிக சவால்கள் இருக்கின்றன. அப்ப எல்லாம்.. என்று நாங்க குழந்தைகளை எப்படி வளர்த்தோம் என்று பெருமைப்பட்டாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் இருக்கவே செய்தன. பெண் – ஆண் குழந்தை பாகுபாடு தற்காலத்தில் வெகுவாக குறைந்து விட்டது. அது பூஜ்ஜியத்தை நோக்கி நகரவேண்டும். குழந்தை வளர்ப்பில் பெரும்பாலும் பெண்களின் பங்கே அதிகமாக உள்ளது. ஆண்களின் பங்கும் இன்னும் பெரும்பாலும் குறைச்சலாகவே உள்ளது.
நாம் ஆண்டாண்டாக பெற்ற கல்வியும் தொழில்நுட்பமும் எப்படி குழந்தை வளர்ப்பில் வலுசேர்க்கப்போகின்றது என்பதில் கவனம் தேவை. தொழில்நுட்பம் நிறைய கவனச்சிதைவினை நோக்கிச்செல்கின்றது. நாமும் எதனை நோக்கி செல்கின்றோம் என்றே பலசமயம் புரிவதில்லை. குழந்தை என்னவாக வேண்டும் என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தால் அது ஒவ்வொரு முறையும் புதிய புதிய பரிமாணத்தினை எடுக்கும். சிறப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் சிறந்த என்பதற்கான அர்த்தம் கூர்மையாகிக்கொண்டே செல்லும். வாழ்க்கை, வேலை என எதுவாக இருந்தாலும் தோல்வி ஏற்படுவது இயல்பானது. அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அதில் இருந்து வெற்றிக்கான வழியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களையும், உங்கள் முயற்சிகளையும் முழுமையாக நம்புகிற நபரைத் தேர்ந்தெடுத்து, அவருடன் சேர்ந்து பயணிப்பதே வளமான எதிர்காலத்துக்கான சரியான பாதைக்கு வழிவகுக்கும்.