குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
இன்றைய தலைமுறை பெற்றோர் பலரும் அதிக பாசம் காட்டி குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆனால் எந்த அளவுக்கு அன்பையும், அரவணைப்பையும் வழங்குகிறார்களோ அதே அளவுக்கு அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்கவும் செய்கிறார்கள். அப்படி கடுமையாக கண்டிப்பது உளவியல் ரீதியாக அவர்களை காயப்படுத்தும். எப்போதும் அன்பாக நடத்தும் பெற்றோர் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறார்களே என்ற ஆதங்கத்தை அவர்கள் மனதில் விதைக்கும். ஒவ்வொரு சமயத்திலும் அவர்கள் தவறு செய்யும்போது குரலை உயர்த்தி கடுமையாக பேசுவது மனதளவில் காயப்படுத்திவிடும்.
அதன் அதிர்வு ஆழ் மனதில் பதிவாகிவிடும். அதன் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும். உளவியல் ரீதியாக பலவீனமாகிவிடுவார்கள். பெற்றோர் - பிள்ளைகள் இடையேயான பிணைப்பிலும் விரிசல் ஏற்படக்கூடும். உங்கள் குழந்தையை பொது இடத்தில் கத்தாதீர்கள், இதனால் அவர்கள் மற்றவர்கள் மத்தியில் குற்றஉணர்ச்சியாக உணர்வார்கள். மேலும் நல்ல பழக்கவழக்கங்களைத் தூண்டுவதற்குப் பதிலாக, அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். இதன் விளையாவாக அவர்கள் நல்ல விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்களை வெறுக்கத் தொடங்கலாம். எனவே அவர்கள் தவறு செய்தாலும் தனியாக அழைத்து சென்று கண்டிப்பது நல்லது. ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்கின்றன, அது தவறு என ஒரு முறை புரிய வைத்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இருப்பினும், அதைப் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டாக மாற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்காது. அவை குழந்தைகளின் நடத்தையில் மேலும் சிக்கலை தரும். எனவே, தொடர்ந்து அசிங்கப்படுத்துவை தவிர்க்கவும்.