No results found

    பெற்றோரின் நீண்ட அறிவுரைகளை கேட்க விரும்பாத குழந்தைகள்...


    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள். அதனை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

    குழந்தைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்: குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும். அறிவுரை வழங்குவதை தவிருங்கள்: இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.

    காது கொடுத்து கேளுங்கள்: பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள். பெற்றோரின் பார்வையில் அவர்கள் பேசும் விஷயங்கள் சாதாரணமாக தெரியலாம். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வை முன் வைத்தால் மட்டுமே தொடர்ந்து பெற்றோரிடம் ஆர்வமாக பேசுவதற்கு முயற்சிப்பார்கள். அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவில்லை என்றால் நாளடைவில் பெற்றோரிடம் பேசும் நேரம் குறைந்து போய்விடும்.

    குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள். கண் தொடர்பு அவசியமானது. அவர்களின் கண்களை பார்த்தவாறே அவர் களின் பேச்சை ரசித்து கேளுங்கள். குழந்தைகள் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல், பேச்சுக்கு இடையே குறிப்பிடுவார்கள். அதனை பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேர்மறையான சம்பவங்களை சொல்லுங்கள்: குழந்தைகளிடம் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் கதைகளை கூறலாம். தங்கள் வாழ்க்கையில் நடந்த நேர்மறையான சம்பவங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளலாம். எதிர்மறையாக உணரக்கூடிய விஷயங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தாங்கள் செய்த தவறுகள், எதிர்பாராமல் நடந்த விபத்துகள், மனதை காயப்படுத்தும் கசப்பான சம்பவங்கள் போன்றவற்றை சொல்லக்கூடாது. நீங்கள் பகிரும் சம்பவங்கள் அல்லது கதைகள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

    தினமும் நேரம் ஒதுக்குங்கள்: குழந்தைகளிடம் தினமும் பேசுவது பெரிய விஷயமல்ல. தினமும் குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளுக்காகவே ஒதுக்குவதுதான் சிறப்பானது. அந்த நேரம் அவர்களுக்கு உரியதாக மட்டுமே அமைய வேண்டும். அன்றைய நாளின் செயல்பாடுகள் முழுவதையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். இது குழந்தைகளுடன் வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். பாதுகாப்பான சூழலையும் உணர்வார்கள். பெற்றோர்கள் தங்களுக்கு பக்கபலமாக இருப்பதாக அகம் மகிழ்வார்கள். கேட்ஜெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்: பெரியவர்கள், குழந்தைகள் உட்பட பெரும்பாலானவர்கள் மொபைல் போன்கள், தொலைக்காட்சி அல்லது வீடியோ கேம் விளையாட்டுகளில் பொழுதை கழிக்கிறார்கள். அவை மன ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நெருக்கமான உறவுகளுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பையும் குறைத்துவிடும். எனவே கேட்ஜெட் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனை பின்பற்ற வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் எக்காரணம் கொண்டும் கேட்ஜெட் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அவர்களின் கவனத்தை பதிய வைக்க வேண்டும். பெற்றோரும் அவர்களுடன் நேரத்தை செலவிடவேண்டும். இது குழந்தைகளுடன் ஆழமான பிணைப்பை வளர்க்க உதவும்.

    Previous Next

    نموذج الاتصال